நாய் கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்த காமெடி நடிகர் சூரி!

சமீபத்தில் வெளியான 'தி லயன் கிங்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்காக முன்னணி நடிகர்கள் நடிகைகள் பின்னணி குரல் கொடுத்தார்கள். இந்த நிலையில் இதே பாணியில் உருவாக்கப்பட்ட தமிழ் படமொன்றில் நாய் கேரக்டருக்கு நடிகர் பிரபல காமெடி நடிகர் சூரி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

ஸ்ரீநாத் ராமலிங்கம் என்பவர் இயக்கிய ’அன்புள்ள கில்லி’ என்ற திரைப்படத்தில் நாய் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இந்த கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுக்க யாரை தேர்வு செய்யலாம் என இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆலோசனை செய்த நிலையில் ஒளிப்பதிவாளரின் பரிந்துரையின் பேரில் சூரியை நாய்க்கு குரல் கொடுக்க வைக்க முடிவு செய்தனர்.

இதுகுறித்து சூரியிடம் பேசியபோது அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக நாய்க்கு குரல் கொடுத்தார் என்று இயக்குனர் ஸ்ரீநாத் கூறியுள்ளார். தி லயன் கிங் போன்ற படங்களுக்கு பெரிய நடிகர்கள் குரல் கொடுக்கும் போது நம்ம ஊரு படங்களில் உள்ள நாய்க்கு குரல் கொடுப்பதில் எந்த வித தவறும் இல்லை என்று அவர் கூறியதாக இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் தனது பாணியில் காமெடியுடன் அவர் குரல் கொடுத்திருப்பதால், அவரது பின்னணி குரல் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இதே நாய்க்காக டூயட் பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆண்ட்ரியா பாடி உள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.