ஜோதிகாவை விட சிறப்பாக நடனமாட வேண்டும்... நடிகை கங்கனா ரணாவத் பயிற்சி

மும்பை: சந்திரமுகியில் இடம்பெற்ற ஜோதிகாவின் நடனத்தை விட சிறப்பாக நடனமாட வேண்டும் என்பதற்காக கலா மாஸ்டரை மும்பைக்கு வரவழைத்துள்ளாராம் கங்கனா ரணாவத்.

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி, கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள கங்கனா ரணாவத் இந்த படத்தின் நடன பயிற்சிக்காக, கலா மாஸ்டரை மும்பைக்கு வரவைத்து நடனம் கற்றுக்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 18 வருடங்களுக்கு பின் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து, ஏற்கனவே கங்கனா பேட்டி ஒன்றில் கூறிய போது ஜோதிகா அளவிற்கு தன்னால் நடிக்க முடியாது என ஓப்பனாக கூறியது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியது. ஜோதிகாவுக்கு நிகரான நடிப்பையும், நடனத்தையும், வெளிப்படுத்த வேண்டும் என்பதால் பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டரை மும்பைக்கு வரவழைத்து இப்படத்தில் இடம்பெறும் நடனத்தை கங்கனா கற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக, பாந்த்ராவில் கலா மாஸ்டர் உடன் கங்கனா நடந்து செல்லும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.