ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்

சென்னை: உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள் என நடிகை மாளவிகா அவினாஷ் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை மாளவிகா அவினாஷ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். பைரவா, கைதி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பாஜகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும், பிரபலங்களும் விரைவில் குணம் பெற ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.