ஜெனிவா ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

ஜெனிவா: ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்துக்கு வெளியே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் ஐ.நா.விற்கு எதற்கு சென்றார் ரஹ்மான் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த மாதம் தமிழகத்தில் கோவை, சென்னை என அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

இதில், சென்னை இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பதிவிட்ட நிலையில், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ரஹ்மானுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா. அவையின் தலைமையகத்திற்கு வெளியே நிற்கும் புகைப்படத்தை ரஹ்மான் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ஆனால், எதற்காக ஐ.நா. அவைக்கு சென்றார் என்ற தகவலை பகிரவில்லை. முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா.வில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.