இந்தியன்-2 படத்தில் நானும் நடிக்கிறேன்... காஜல் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: இந்தியன் 2 படத்தில் நானும் நடிக்கிறேன் என்று காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் நேரலையில் சொன்னதால் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. படம் கைவிடப்படுமோ என்று நினைக்கையில் விக்ரம் படத்தின் வெற்றி, தயாரிப்பு தரப்பை மீண்டும் இந்தியன் 2 படத்தைக் கையிலெடுக்க வைத்திருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சினைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது.

இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக அறிவித்தார். இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தப் படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறந்துவிட்டது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி துவங்கவிருப்பதாகவும், தானும் அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களிடம் தகவல் பகிர்ந்துள்ளார்.

இந்தியன் 2 படத்தை முடித்துகொடுத்துவிட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் தொடர்வார் என்று கூறப்படுகிறது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.