இந்தியை பிறர் மீது திணிப்பது அறியாமை... கமலின் பதிவு

சென்னை: இந்தியை வளர்ப்பதற்கு, பிறர் மீது திணிப்பது அறியாமை. திணிக்கப்பட்டவை எதிர்க்கப்படும் என்று கமல் பதிவிட்டுள்ளார்.

கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்றத்தில் இந்தி கற்பிக்கும் திட்டத்துக்கு எதிராகப் பேசிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான திட்டம் இந்த நாட்டை நாசமாக்கிவிடும். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடியில் இந்தியில் தேர்வு எழுதுவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், தாய்மொழி நமது பிறப்புரிமை. பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது தனிப்பட்ட விருப்பத்தின் மூலம் செய்யப்படுகிறது. இது 75 ஆண்டுகளாக தென்னிந்தியாவின் உரிமை.

வடக்கு கிழக்கும் அதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்ப்பதற்கு, பிறர் மீது திணிப்பது அறியாமை. திணிக்கப்பட்டவை எதிர்க்கப்படும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.