தமிழகத்தில் மட்டும் ரூ.20 கோடி வசூல் வேட்டையாடிய விடுதலை படம்

சென்னை: வசூல் வேட்டை நடத்திய விடுதலை படம்... இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் தமிழகத்தில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச்.31ஆம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் எனப் பலர் நடித்துள்ள இந்தப் படம் பாராட்டுக்களையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் 'விடுதலை'. படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், அந்தப் படத்தின் முதல் பாகம் சென்ற மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடைநிலை காவல் அதிகாரியாக இந்தப் படத்தில் நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ்மேனன், கௌதம் மேனன், ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனுடன் இந்தப் படத்தில் இளையராஜா முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், காட்டு மல்லி, உன்னோட நடந்தா உள்ளிட்ட பாடல்கள் பாராட்டுகளையும், பின்னணி இசை கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டை பெற்றது. அதே போல் வசூலிலும் இந்த படம் கவனத்தை ஈர்த்து வருவதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ஒரு வாரத்தில் 20 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் தாண்டி உள்ளது. இதன் மூலம் 13 கோடி ரூபாய் ஷேர் தொகை கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சூரி நாயகனாக நடித்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம், திரைப்பட வர்த்தகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான வசூலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.