அஜித் 61 படம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

சென்னை: அஜித்தின் படம் தள்ளிப் போகிறது... வினோத் உடன் மூன்றாவது முறையாக அஜித்குமார் இணைந்துள்ள பெயரிடப்படாத படம் ‛அஜித் 61.'

வங்கி கொள்ளை தொடர்பான திரைக் கதையில் ஏற்கனவே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது என செய்திகள் வெளியானது. ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் அமைக்கப்பட்ட அரங்கில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

இந்தப்படம் 2022 ஆம் வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என கூறப்பட்டது ஆனால் தீபாவளி அன்று வேறு படங்கள் வெளியிட்டால் தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைக்காது என்கிற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

கார்த்தி இருவேடங்களில் நடித்துள்ள சர்தார் படத்தின் தமிழ்நாடு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வருகின்ற பிரின்ஸ் படத்தின் தமிழ்நாடு உரிமையை தமிழ் சினிமாவின் முதல்நிலை பைனான்சியர் மதுரை அன்புசெழியன் வாங்கியுள்ளார்.

உதயநிதி, அன்பு செழியன் இருவருமே தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வெளியீடு, இவற்றை தீர்மானிப்பவர்கள். இவர்களிருவரும் தீபாவளி அன்று தங்கள் படங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனை கடந்து வேறு புதிய படங்களை வெளியிடுவதும், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதும் இயலாத காரியம்.

குறிப்பாக தமிழகத்தில் 1100 திரைகள் மட்டுமே தற்போது இயங்கிவருகிறது. இரு படங்களுக்கும் சமமாக குறைந்தது தலா 400 முதல் 450 வரை தியேட்டர்களாவது கிடைக்கும். எஞ்சிய தியேட்டர்களில் மட்டும் மற்றொரு புதிய படத்தை திரையிட்டு வெற்றிபெற முடியாது.
அதனால் அஜித்குமார் நடித்து வரும்படத்தை வெளியிட முடியாது. படம் வெளியீடு தாமதமாகும் என்பதால் கோடை விடுமுறையை தன் விருப்பபடி மோட்டார் பைக் பயணம், கார் பயணம் என ஐரோப்பிய நாடுகளில் அஜீத்குமார் கழித்து வருகிறார்.