நடிகர் விஜய்- எஸ்.ஏ.சந்திரசேகர் மத்தியில் புகைச்சல் அதிகரிக்கிறதா?

நடிகர் விஜய்- தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மத்தியில் புகைச்சல் அதிகரித்துள்ளது என்று கோலிவுட்டில் தகவல்கள் உலா வருகிறது.

நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.எ.சந்திரசேகருக்கும் இடையே மனவருத்தம் இருப்பதாகவே இருவரின் செயல்கள் மூலமாக தெரிகிறது. தனது மகன் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கில்தான் ரசிகர் மன்றங்களை கண்காணித்து வந்தார் எஸ்.ஏ.சி. தற்போதைய சூழலில் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற அவரது முயற்சிதான் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்.' இந்த இயக்கத்திற்கு தலைமையேற்க விஜய் வந்துவிடுவதாகவே எஸ்.ஏ.சி. நம்புகிறார்.

இதைத்தான் அவரது பேட்டியின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. சாலிகிராமத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது அவரிடம், ''விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியது ஏன்? என்ற கேள்விக்கு, எனக்கு தேவைப்பட்டது. அதனால் மாற்றினேன். மக்கள் மன்றத்தில் இருக்குறவங்க சிலர் விரும்பினாங்க. அதனால தொடங்கினேன்'' என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 'இளையதளபதி' என்று சொன்னால், அது விஜய்யைத்தான் குறிக்கும். அவரின் சம்மதம் இல்லாமல் எப்படி அவர் பெயரில் கட்சியை தொடங்கி இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, '' அவர் பெயருல 93ல் ரசிகர் மன்றமா ஆரம்பிச்ச ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறி, இப்போது கட்சியாக மாறியிருக்கிறது.'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தன்னோட ரசிகர்கள் யாரும் உங்க கட்சியில சேரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே விஜய்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவரு சொன்னதா நீங்கதான் சொல்லுறீங்க''என்று தெரிவித்தார் எஸ்.ஏ.சி.

என் தந்தை கட்சி தொடங்கின விசயமே எனக்கு ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரியும் என்று சொல்லியிருக்கும் விஜய், தந்தை ஆரம்பித்த கட்சியில் யாரும் சேரக்கூடாதுன்னு ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் மத்தியில் புகைச்சல் அதிகரித்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.