ஜவான் படத்தில் எனது இசை சிறப்பாக இருக்கும்... அனிருத் தகவல்

சென்னை: ஷாருக்கானை பார்த்து வளர்ந்தவன் நான். இதுவரை நான் இசை அமைத்ததிலேயே ஜவான் படத்தில்தான் சிறப்பாக இருக்கும். இது அவருக்கான சமர்ப்பணமாக இருக்கும் என்று அனிருத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் இன்னும் பலர் சண்டைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. இந்தப் படத்தில் முதன்முறையாக அனிருத் அட்லியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

“ஷாருக்கானை பார்த்து வளர்ந்தவன் நான். இதுவரை நான் இசை அமைத்ததிலேயே இந்தப் படத்தில்தான் சிறப்பாக இருக்கும். இது அவருக்கான சமர்ப்பணமாக இருக்கும்” என அனிருத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.