வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியது ரெட் ஜெயன்ட்

சென்னை: வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ள ‘வாரிசு’ படத்தை தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. தில் ராஜூ தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை லலித்குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

அண்மையில் தில்ராஜூ அளித்த பேட்டி ஒன்றில், ‘‘வாரிசு படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு பகுதிகளில் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.