நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதை அள்ளியது ஆர்ஆர்ஆர் படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த பாடலுக்கான 95வது ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் 'நாட்டு நாட்டு' பாடல். இது ரசிகர்கள் மத்தியில் செம உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் மார்ச் 25-ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடியை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வானது.

இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு விருது வழங்கும் மேடையில் இசையமைப்பாளர் கீரவாணி பேசுகையில், 'தி கார்பெண்டர்ஸ்' (அமெரிக்க இசைக்குழு) பாடல்களைக் கேட்டுத்த்தான் நான் வளர்ந்தேன். இன்று ஆஸ்கர் மேடையில் இருக்கிறேன். அமெரிக்க இசைக்குழுவின் 'Top of the World' என்ற பாடலைப் பாடினார். என்னுடைய மனதில் ஒரேயொரு ஆசைதான் இருந்தது.

ராஜமௌலிக்கும் அதுவே இருந்தது, என் குடும்பத்துக்கும் அதுவே இருந்தது. 'RRR' படம் ஆஸ்கார் விருது வெல்லவேண்டும், இந்தியர்களின் பெருமையான படைப்பு இது. இந்த வெற்றி என்னை இந்த உலகின் உச்சியில் (Top of the World) நிறுத்தும்' என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.