ஏழைகளுக்கு ரூ.85 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய பாடகி சின்மயி!

கொரோனா வைரஸ் காலத்தில் ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஒரு சில லட்சங்கள் நன்கொடையாக கொடுத்து விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்களின் மத்தியில் சத்தமின்றி 85 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துவிட்டு அமைதியாக இருக்கும் பாடகி சின்மயி குறித்து தற்போது தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ய புதுமையான முயற்சியில் இறங்கினார். இதனை அடுத்து தங்களுக்கு பிடித்தமான பாடலை கேட்டால் பாடி கொடுப்பதாகவும் அதில் கிடைக்கும் பணத்தை கொரோனாவால் வறுமையில் வாடும் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறியிருந்தார்.

பாடகி சின்மயியின் இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பாடல்களை விரும்பிக் கேட்டனர். இதுவரை அவர் 3000 பாடல்களை பாடி வீடியோவாக ரசிகர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இதன் மூலம் அவருக்கு கிடைத்த ரூ.85 லட்சம் பணத்தை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் வங்கி கணக்கில் அவர் செலுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் இதுவரை அவர் பாடிய 3000 வீடியோ பாடல்களையும் வீடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாடகி சின்மயி கூறிகையில், 'இந்த கொரோனா காலத்திலே பலர் வேலை இழந்து அடிப்படை தேவைகளுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதுவரை 3000 வீடியோக்கள் அனுப்பப்பட்டன. ரசிகர்களிடம் இருந்து கிடைத்த ரூ.85 லட்சத்தை ஏழைகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த பணம் ஏழைகளின் அடிப்படை தேவைகள் மற்றும் கல்வி மருத்துவச் செலவுக்கு உதவும் என்று நம்புகிறேன். அவர்களுக்கு உதவ இந்த முயற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.