சிம்பு அளித்த சூப்பர் ஒத்துழைப்பு; வியந்து நிற்கும் கோலிவுட் வட்டாரம்

சிம்புவின் சூப்பர் ஒத்துழைப்பு... மாநாடு படத்தில் சிம்பு ஒத்துழைப்புடன் நடித்ததால் படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. மழை விடாமல் தொடர்ந்தததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு படக்குழு.

ஈஸ்வரன் படம் மிக விரைவாக முடிக்கப்பட்டது போல் மாநாடு மிகப்பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந்தாலும் கூட திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகி விடும் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

இந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் சிலம்பரசன் தொடர்ந்தால் வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்று திரையுலகில் பேச ஆரம்பித்துள்ளனர்.