மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

கொரோனா அச்சுறுத்தல் தணிந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியது.

இதில் உறுப்பினர்களான முன்னாள் வீரர்கள் ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்த்தனே, ஆன்ட்ரூ ஸ்டிராஸ், ஷான் பொல்லாக், ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை பெலின்டா கிளார்க், இலங்கை தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் உள்ளிட்டோர் தங்களது யோசனைகளை தெரிவித்தனர்.

புதிய விதிமுறைகள் குறித்த விவரம் வருமாறு:-
* பந்தை ‘ஸ்விங்’ செய்வதற்காக களத்தில் வீரர்கள் அவ்வப்போது பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவார்கள். ஆனால் எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம் பந்து வீச்சாளர்கள் வியர்வையால் பந்தை தேய்த்து பளபளப்பாக்க அனுமதி வழங்கப்படுகிறது.

*கொரோனா பீதியால் மற்ற நாடுகளுக்கு செல்வதில் நிறைய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு உள்ளூர் நடுவர்களை சர்வதேச போட்டிகளுக்கு நியமித்து கொள்ளலாம்.

*நடுவர்களை வழக்கம் போல் ஐ.சி.சி.யே நியமிக்கும். குறிப்பிட்ட நாடுகளின் நடுவர்கள் ஐ.சி.சி.யின் எலைட் பட்டியலில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லாத பட்சத்தில் உள்ளூரில் சிறந்த நடுவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

*உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் வெவ்வேறு விதமான நடுவர்களை நியமிக்கும் நிலை உள்ளதால் அவர்களுக்கு உதவுவதற்கு தொழில்நுட்பத்தை கூடுதலாக பயன்படுத்தலாம். நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை இன்னிங்சில் கூடுதலாக ஒரு முறை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் இது பொருந்தும்.

ஐ.சி.சி.யின் நிர்வாக குழுவினர் வருகிற 28-ந்தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்க உள்ளனர். அப்போது மேற்கண்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.