பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் விஸ்வநாத் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி

ஐதராபாத்: பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத் (93) மறைவுக்கு திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத், தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அவரது இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் எண்ணற்ற படங்களை இயக்கி நடித்துள்ளார்.

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கிய சங்கராபரணம் (1979), சலங்கை ஒலி (1983), சிற்பிக்குள் முத்து, (1985) ஆகிய படங்கள் அவரது புகழை என்றென்றும் பரப்பிய இந்தியப் படங்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் கே. விஸ்வநாத்தின் பணியைப் பாராட்டி இந்திய அரசால் தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். எட்டு முறை நந்தி விருது பெற்றவர், ஆறு முறை தேசிய விருது பெற்றவர்,

ஒன்பது முறை பிலிம் பேர் விருது பெற்ற அன்னாரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. 1965 ஆம் ஆண்டு ‘ஆத்ம கௌரவம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.விஸ்வநாத், தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான நந்தி விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதையும் பெற்றார்.

பல தமிழ் படங்களில் நடித்து மறைந்த இயக்குனர் கே.விஸ்வநாத், தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் நிரூபித்தவர்.

அந்த வகையில் சமீப காலம் வரை கமல்ஹாசன் நடித்த ‘குருதி புனல்’, அஜித்துடன் ‘முகவரி’, பார்த்திபன் நடித்த ‘காக்கைச் சிறகுகளே’, விஜய் நடித்த ‘பகவதி’, தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ என பல தமிழ் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட கே விஸ்வநாத் ஒரு ஆடியோகிராஃபர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.