பாராட்டிய நடிகர் தனுசிற்கு நன்றிகள் கூறிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்று நடிகர் தனுஷ் போட்டிருந்த பதிவுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ‘மாமன்னன்’ படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்திருந்த்தார்.அதில், “மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிக்கு தியேட்டர் அதிர போகின்றது .

இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தனுஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எல்லாவற்றிற்கும் நன்றி தனுஷ். உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.