கமல் படத்திற்கு கதை எழுதினாராம் வெண்ணிற ஆடை மூர்த்தி

சென்னை: கமல் படத்திற்கு நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கதை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூர்த்தி 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில்தான் ஜெயலலிதாவும். நிர்மலாவும் அறிமுகமானார்கள். அதனால் படத்தின் தலைப்பு மூர்த்திக்கும் நிர்மலாவுக்கும் நிலைத்துப் போனது.

குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த மூர்த்தி ஒரு கட்டத்தில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார் மூர்த்தி.

‘ஏன்டா மூதேவி. திருந்தவே மாட்டியா?” என்று அவரது புகைப்படத்துடன் கூடிய வாசகம் இன்றும் ஃபேஸ்புக்கில் போட்டோ கமெண்டாக நெட்டிசன்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசியவர் இவர்தான். இந்நிலையில் 52 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்நிலையில் சாய்வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திரையுலக வாழ்க்கை குறித்து பேசியதுடன் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் நடித்த மாலைசூடவா படம் குறித்தும் பேசினார்.

இப்படத்தின் கதையை வெண்ணிற ஆடை மூர்த்திதான் எழுதினாராம். பலருக்கு இன்னும் தெரியவில்லை. இந்தப் படத்தைத் தவிர ருசி என்ற இன்னொரு படத்துக்கும் கதை எழுதி இருக்கிறார்.