உடல் ஆரோக்கியம், வலிமைக்கு உறுதுணை புரியும் ஆவாரம்பூ

சென்னை: ஆவாரை தாவரத்தின் அனைத்து பாகங்களையும் கொண்டு செய்யப்படும் சூரணத்தை ஏதேனும் நோய் இருப்பவர்கள் என்றில்லாமல் உடல் ஆரோக்கியம் வேண்டும் என்பவர்களும், வலிமையுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் எடுத்து கொள்ளலாம்.
சாலை ஓரங்களில் திடீரென மஞ்சள் காடாக காட்சியளிக்கும் பூக்களை பார்த்திருப்போம். அந்த பூ... ’ஆவாரம் பூ’. மருத்துவக்குணம் நிறைஞ்சது. அப்படி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் கைக்கொடுக்கக்கூடியது ஆவாரம் பூ.
’’ஆவாரம்பூவில் இல்லாத சத்துகளே இல்லை. அதனால்தான் ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா என்பார்கள்’’ என ஆவாரையைப் பற்றிய பெருமைகள் அனைவரும் கூறுவர். ஆவாரையின் பட்டை, இலை , பூ, வேர், மகரந்தம், பிசின் அனைத்தும் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது என்பதை வலியுறுத்தி, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
காயகற்ப மருந்து: ஆவாரை தாவரத்தின் அனைத்து பாகங்களையும் கொண்டு செய்யப்படும் சூரணத்தை ஏதேனும் நோய் இருப்பவர்கள் என்றில்லாமல், உடல் ஆரோக்கியம் வேண்டும் என்பவர்களும், வலிமையுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம். காயகற்ப மருந்து செய்ய, ஆவாரை மூலிகையை (தாவரத்தின் அனைத்துப் பகுதிகளையும்) சேகரிக்க வேண்டும். இதனை ஒவ்வொரு பாகமாக எடுத்து நன்கு கழுவ வேண்டும்.
அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். பொடியாக அரைக்கும் அளவிற்கு இரண்டு நாள்கள் வரை நன்றாக உலர்த்தி எடுக்க வேண்டும். பிறகு அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை தினசரி காலை ஒரு வேளை மட்டும் 5 கிராம் எடுத்து தேனில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதனால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.