செரிமான பிரச்னைக்கு சிறந்த மருந்தாக விளங்கும் வாழைப்பழம்

சென்னை: வாழைப்பழம் பலரும் எளிதில் வாங்க கூடிய ஒரு பழமாகும். செரிமான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகும். அப்படிப்பட்ட வாழைப்பழம் குளிர்ச்சியும் கூட. சில வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று கூட சொல்வார்கள்.

அந்த அளவிற்கு வாழைப்பழம் உடல் சூட்டை தணிக்க உதவும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் பல நோய்களில் இருந்து நம்மால் விடுபட முடியும். வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

மருத்துவரை அணுகினால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை தினமும் தூங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் என்றே கூறுவார்கள். குறிப்பாக வாழைப்பழங்களை வாங்கும் போது, உள்ளூர் வகையை சேர்ந்த நாட்டு பழங்களை வாங்கி உண்ணுங்கள். அது சிறந்த பலனையே தரும். அப்படி வாழைப்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

காலை உணவுடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் அசிடிட்டி , கால்களில் ஏற்படும் பிடிப்பைத் தடுக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உருவாக்காத ஒரு நிலை ஆகும். வாழைப்பழம் ஹைப்போ தைராய்டிசம் நிலையை சீராக்குகிறது. இதனால் உங்கள் மனநிலை மேம்படும். மேலும் மதிய நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி சோர்வில் இருந்து விடுவிக்கும்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். மேலும், வாழைப்பழத்தில் குறைந்த அளவு பிரக்டோஸ் உள்ளது, இது ஐ.பி.எஸ் எனும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியை கட்டுப்படுத்த உதவுகிறது.