இதய பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க உதவும் சில உடற்பயிற்சிகள்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 71 லட்சம் பேர் இதய நோய் பிரச்சினைகளுக்குள்ளாகி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதும், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதும் அவசியம். உடல் பருமன் முதல் புகைப்பிடிப்பது வரை பல்வேறு பழக்கவழக்கங்கள் இதய நோய்க்கு காரணமாக இருக்கின்றன. அவற்றுள் உடல் பருமன், உடல் இயக்க செயல்பாடு இல்லாமை, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம் போன்ற பிரச்சினைகளை உணவுக்கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் மூலம் நிவர்த்தி செய்துவிட முடியும்.

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும் உடல் வலிமையையும் அதிகரிக்க செய்யும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் மிதித்தல், நீச்சல், ஜம்பிங் போன்றவை அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடங்கள் செய்து வருவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ‘ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங்’ எனப்படும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்வது உடல் அமைப்பை மேம்படுத்த உதவும். உடலில் அதிக கொழுப்பு தசை கொண்டவர்கள், தொப்பை உடல்வாகு உடையவர்கள் இந்த பயிற்சிகளை செய்யலாம்.

தரையில் அமர்ந்திருந்தபடி கைகளை கொண்டு கால்களை தொடுவது, உடலை வில்லாக வளைத்து கையை கொண்டு காலை தொடுவது, உடலை பின்னோக்கி வில்லாக வளைப்பது போன்ற பயிற்சிகள் உடலை நெகிழ்வடைய செய்து தசை ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இத்தகைய நெகிழ்வான பயிற்சி மூட்டுவலி, தசைப்பிடிப்பு, தசை சார்ந்த பிற பிரச்சினைகளை போக்க உதவும். இத்தகைய பயிற்சிகளுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இவையும் இதய நலனை காக்க துணைபுரியும்.

தியானம் மற்றும் யோகா செய்வதும் தசைகளை வலுப்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தினமும் இவைகளை மேற்கொள்வது இதயத்தின் நலனுக்கு ஏற்றது. ஒரு நிமிடம் ஓடுவது, பின்னர் மூன்று நிமிடம் நடப்பது பின்னர் மீண்டும் ஓடிவிட்டு நடப்பது என குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் சுழற்சி அடிப்படையில் இருவேறு பயிற்சிகளை செய்வதும் நல்லது. இப்படி இடைவெளியுடன் வேறு பயிற்சிக்கு மாறுவது உடல் சோர்வடையாமல் நீண்ட நேரம் பயிற்சி செய்வதற்கும் உதவும்.