பாலுடன் பழங்களை எப்படி சேர்த்து சாப்பிட வேண்டும்!!!

சென்னை: பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. அதோடு இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. மேலும் பால் எளிதில் ஜீரணமாகக்கூடியது மற்றும் அதில் உள்ள சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது. பாலை சூடான நிலையில் குடித்தால் மட்டுமே எளிதில் ஜீரணமாகும். குளிர்ந்த நிலையில் குடித்தால், அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.
பாலுடன் சில பழங்களை சேர்த்து சுவையான வடிவில் உட்கொள்கிறார்கள். பாலை பழங்களுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஒரு சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, நன்கு கனிந்த மற்றும் இனிப்பான பழங்களையே பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது எந்தெந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் காண்போம்.
மாம்பழத்தில் இரும்புச்சத்து, புரோட்டீன், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே மாம்பழம் தசைப் பிடிப்பு, பதட்டம், மன அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கிறது. அதே வேளையில் பாலில் கால்சியம், வைட்டமின் டி போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே நன்கு கனிந்த இனிப்பான மாம்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அது இதயம், கண்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து சீராக்குகிறது.

வாழைப்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து, மற்றும் கால்சியத்துடன், வைட்டமின் பி6, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி3 போன்றவையும் உள்ளது. இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து, சுவைக்கு தேனையும் கலந்து உட்கொண்டால் பலவீனமானவர்களின் உடல் வலுவாகும் மற்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நல்லது.
அவகேடோ பழம் சுவையானது மட்டுமின்றி, மிகவும் குளிர்ச்சியானதும் கூட. கோடைக்காலத்தில் அவகேடோ பழத்தை சாப்பிட்டால் உடல் சூட்டைத் தணிக்கலாம். அதுவும் அவகேடோவை பாலுடன் சேர்த்து உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக இது கொழுப்புத் திசுக்களுக்கு ஊட்டமளிக்கிறது.