6 வயது பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் நிவாரணம் செய்வது எப்படி ?

6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும். சிலருக்கு சளி இருக்கும் போதும் வறட்டு இருமல் உண்டாகும். ஃப்ளூ வைரஸாக இருந்தாலும் வறட்டு இருமல் வரக்கூடும். பிள்ளைகளுக்கு வாசனை அலர்ஜி பிரச்சனை, புகை போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

​குழந்தைகளுக்கு ஆவி பிடிக்க வைக்க முடியாது. ஆனால் வளரும் பிள்ளைகள் ஓரளவு சூட்டை தாங்ககூடியவர்கள். எனினும் பெரியவர்களை போன்று பிடிக்க வேண்டியதில்லை. வெந்நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கல் உப்பு அதோடு சிறிதளவு யூகலிப்டஸ் தைலம் அல்லது இலைகளை சேர்த்து வாய்குறுகிய பாத்திரத்தில் வைத்து அறையின் நடுவில் வைக்க வேண்டும். பிறகு பாத்திரம் அருகில் ஒரு அடி அல்லது இரண்டு அடி தள்ளி பிள்ளையை அமர்த்திகொள்ளுங்கள். தினமும் ஒருமுறை என ஐந்துநாட்கள் இப்படி செய்தால் போதும்.

​மசாலா உணவுகளில் பயன்படுத்தும் பட்டை உண்மையில் அருமருந்து தரக்கூடியது என்று சொல்லலாம். பட்டை நுரையீரலில் இருக்கும் சளியை அகற்ற உதவுகிறது. நுரையீரலில் அடைப்பு இருப்பவர்கள் பட்டையை மற்ற வைத்திய பொருள்களுடன் பயன்படுத்தினால் வறட்டு இருமல் காணாமல் போகும். சளி, இருமலுக்கு நல்ல மருந்து பட்டை என்று சொல்லலாம். ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தேன் கலந்துகொடுக்கலாம். அரை டீஸ்பூன் பட்டைதூளை அரைடீஸ்பூன் அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை கொடுத்துவந்தால் இருமல் சரியாகும்.

​சாதாரணமாகவே வாரம் ஒருமுறையாவது மஞ்சளை பாலில் கலந்து கொடூத்தாலே வளரும் பிள்ளைகளுக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். வறட்டு இருமல் காலங்களில் மஞ்சள் இருமலை போக்கும். பிள்ளைகள் தூங்கும் போது இளஞ்சூடான பாலில் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகையும், மிளகுத்தூள் சிட்டிகையும் கலந்து அந்த சூட்டிலேயே பிள்ளைகளை குடிக்க வையுங்கள். வறட்டு இருமலுக்கு இளஞ்சூடான வெந்நீரை காட்டிலும் சீரகம் வைத்த நீரை கொடுக்க வேண்டும்.