மனஅழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ‘உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது.

வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள். உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டமைக்க மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களில் உடற்பயிற்சி அத்தியாவசியமானது.

உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களை தடுக்கும் வல்லமையும் பெற்றது. உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. கார்டிசோல் ஹார்மோன் அதிகமானால் இனிப்பு பதார்த்தங்களையும், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் சாப்பிட தோன்றும்.

இன்சுலினின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும். உடலில் கொழுப்பும் அதிகம் சேரும்'. உடற்பயிற்சி செய்யும்போது செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் செயல்பாடும் சுமூகமாக நடைபெற வழிவகுக்கும். அப்படி இன்சுலின் உணர்திறன் சமநிலையில் பராமரிக்கப்படும்போது உடல் பருமன், தொப்பை பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் மூளை சிறப்பாக செயல்படும். நினைவாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் போது மூளை மேலும் மீள்தன்மை அடையும்.

அதனால் மனநிலை மேம்படும். உடல் ஆற்றலும் அதிகரிக்கும். உடலிலும், மனதிலும் அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மனச்சோர்வு, அல்சைமர் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விலக்கி வைக்கவும் உதவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்து முதுமை பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க வித்திடும்.