வீட்டில் அலுவலகப் பணியை செய்வதால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு

கொரோனா வைரஸ் பலரின் தூக்கம், உணவு , உடல் உழைப்பு என அனைத்தும் தலைகீழாகிவிட்டது. இதனால் பல பக்கவிளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தலை முடி உதிர்வு. தலை முடி உதிர்வது வழக்கமான பிரச்னைதான் என்றாலும் இந்த லாக்டவுனில் உங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமாக உதிரும் உடையும். இதற்கு அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம்.

வளர்ச்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கு வைட்டமின் B சத்து மிகவும் அவசியம். எனவே வைட்டமின் B சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. அதேபோல் ஸிங்க் ஊட்டச்சத்து தலை முடி வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. வீட்டில் இருப்பதால் முடிந்தவரை ஹேர் டிரையர், ஹேர் ஸ்டிக், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற தலைமுடி அழகுசாதனப் பொருட்களை தவிர்த்தல் நல்லது. தலைமுடியை சிம்பிளாகப் பின்னல் போடுவதே போதுமானது. கூடுதல் ஸ்டைலிங், ஹேர் ஸ்பிரே போன்றவற்றையும் தவிருங்கள்.


உங்கள் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷ்னர் என பயன்படுத்துங்கள். தலை முடி வறட்சி அடையாமல் இருக்க தேங்காய் எண்ணெய் தடவுவதை மறவாதீர்கள். வீட்டில் இருப்பதால் கெமிக்கல் ப்ராடெக்டுகளை தவிர்த்து இயற்கை முறையிலான ஹேர் பேக் போடுவது, பராமரிப்பது என முயற்சி செய்தல் ஆரோக்கியமான வழி. உணவில் புரோட்டின் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். மீன், முட்டை, சிக்கன் போன்றவை புரோட்டின் நிறைந்த உணவுகள்தான்.

அதேபோல் வைட்டமின் C நிறைந்த ஆரஞ்சு , கிவி, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம். வைட்டமின் D சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே உடல் நிலைக் காரணமாக தலைமுடி உதிர்வு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாலும் இதைத் தடுக்கலாம். கால்சியம் சத்தும் முக்கிய ஊட்டச்சத்தாகும். உடலில் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ள அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.