ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை 40 வயதிலேயே எதிர்கொள்ளும் ஆண்கள்

பெண்கள் கிட்டத்தட்ட 50 வயதுகளில் ‘மெனோபாஸ்’ பிரச்சினையை அடைகிறார்கள். மாதவிலக்கு முற்றிலுமாக நிலைத்துப்போகும் அந்த காலகட்டத்தில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள். அப்போது சிலருக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறைந்துபோகும். இதையே போல் அவஸ்தைகள் ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதில் ஏற்படுவதுண்டு. அதற்கு ‘ஆண்ட்ரோபாஸ்’ என்று பெயர்.

முன்பெல்லாம் ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை ஆண்கள் 50 முதல் 60 வயதில் எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். வாழ்க்கையை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறவர்களும்-மாமிச உணவுகளை அதிகம் உண்கிறவர்களும் முன்னதாகவே ஆண்ட்ரோபாஸ் நிலையை அடைந்துவிடுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள், வங்கி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் ஆண்ட்ரோபாஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆண்ட்ரோபாஸை பெரும்பாலான ஆண்கள் முதுமையின் அடையாளமாக கருதுகிறார்கள். அவர்களது ஆண்மை சார்ந்த செயல்பாடுகளில் பலவீனங்கள் தோன்றும். உற்சாகம் குறையும். வழக்கமான வேலைகளைகூட ஆர்வமின்றி செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதுதான். இப்போதெல்லாம் 40 வயதை கடக்கும்போதே ஆண்களின் உடலில் பலவீனங்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன. தசைகளின் பலம் குறைகிறது. மனஅழுத்தம் தோன்றுகிறது. முன்கோபம் அதிகரிக்கிறது. பாலியல் ஆர்வமும் கட்டுப்படுகிறது. ஆனால் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும் என்று கூறுவதற்கில்லை.

குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாதவர்களும் விரைவாக ஆண்ட்ரோபாஸ் நெருக்கடியை சந்திக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியை சந்திப்பவர்களில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. அதனால் உடல் குண்டாகிவிடுகிறார்கள். மதுப் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் விரைவிலே ஆண்ட்ரோபாஸ் பிரச்சினையை சந்திக்க காரணமாகிவிடுகிறது. இந்த பிரச்சினையை சந்திக்கும் ஆண்கள் மனம் தளர்ந்துபோகாமல், மருத்துவரீதியிலான தீர்வுகளை காண முன்வரவேண்டும்.