கர்ப்பிணிப் பெண்கள் உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில்தான் குழந்தைகளின் ஆரோக்கியமே இருக்கிறது, என்பதை நினைவில் கொண்டு, கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிகவும் தேவை. கால்சியம் சத்தை போதிய அளவு கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் குழந்தை பிறந்த பிறகு அதனுடைய எலும்பு மிகவும் பலவீனமாக இருக்கும். ஒரு சராசரி பெண்ணுக்குத் தேவையான இரும்புச்சத்து அளவை விட 2 மடங்கு இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்ணுக்கு தேவைப்படும். இந்த இரும்புச்சத்தே கருவறையில் உள்ள குழந்தைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது.

தினமும் பால், ஒரு கீரை வகை, பழங்கள், என சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவியாக இருக்கும். கேப்ஃபைன் நிறைந்த உணவுகள்,எண்ணெயில் பொரித்த உணவுகள் ,துரித உணவுகள், அதிக காரத்தன்மை வாய்ந்த உணவுகள் , சாக்லேட் ,வெள்ளை சர்க்கரையால் தயாரித்த இனிப்பு வகைகள், மிகவும் சூடு தன்மை வாய்ந்த உணவுப் பொருட்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகள்,மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் அளவான அளவில் தானிய வகைகள், வாழைப் பழம், மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்கள், கீரைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கொட்டைகள், முட்டை, இறைச்சி , பால் முதலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கர்ப்பிணிகளும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கலாம்.