மழைக்காலத்தில் உணவு வகைகளில் தனி கவனம் வேண்டும்

உணவு வகைகளில் தனி கவனம் எடுக்க வேண்டும்... நம் சுற்றுச்சூழலோடு சேர்ந்தது நாம் சாப்பிடும் உணவும். ஒவ்வொரு பருவ காலத்தில் சில உணவுகளைச் சாப்பிட, சில உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. எனவே, நாம் சாப்பிடும் உணவு வகைகளிலும் தனி கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

அப்படி எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் நம் உணவு முறையைச் சரிசெய்துகொள்வதோடு இந்த மழைக்காலத்தையும் ஆரோக்கியமாக ரசித்து வாழ முடியும்.

பாக்ட்ரீயாக்கள் ஈரப்பதத்தில் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரவும் என்பது நமக்கு நன்கு தெரியும். அதனால், வெளியில் கடையில் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். (இதை எப்போதுமே பின்பற்றலாம்)

மழைக்காலம்… புத்தகம்… சூடான காபி என ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் உசுப்பேத்துவார்கள். உடனே காபி அல்லது டீ குடிக்கும் மனநிலை வந்துவிடும். அப்படி வரும்பட்சத்தில் இஞ்சி டீ, சுக்கு மல்லி காபி போன்றவற்றைத் தயாரித்து குடிக்கலாம். குளிரில் சளி பிடிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால், உணவுகளில் மிளகு சேர்த்துக்கொள்ள மறக்க வேண்டாம். இரவில் சூடான பசு பாலில் கொஞ்சமாக மஞ்சள், மிளகு தூள் போட்டு குடிக்கலாம்.

மழைக்காலத்தில் சிலருக்கு செரிமான பிரச்னைகள் வருவது இயல்புதான். அவர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தில் திடீரென்று மாற்ற வேண்டாம். முடிந்தளவு எளிதில் செரிமானமாகும் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம். கடைசி என்றாலும் முக்கியமானது. மழைக்காலத்தில் தாகம் எடுப்பது அதிகம் இருக்காது. அதனால், தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுவார்கள் பலர். சிலர் சாப்பிடும்போது கொஞ்சம் குடிப்பார்கள். இரண்டுமே தவறு. சாப்பிட்டு குறிப்பிட்ட நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே சரி. அதேபோல ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடித்தே ஆக வேண்டும்.