உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், வேக ஓட்டம், பளுதூக்குதல் உள்பட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. 25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும் அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்யலாம்.

விளையாட்டு வீரர்கள் பல மணி நேரம் விளையாடுகிறார்கள். மேலும் பலதரப்பட்ட ஓட்டங்கள், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், பளு தூக்குதல் எனச் செய்து, அத்துடன் அவர்களது உடலுக்கும் விளையாட்டுக்கும் தேவையான உணவு வகைகளை உண்பதால் உடலின் வலிமை மேலும் அதிகரிக்கிறது. முதியவர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, தசைகளை நீட்டிச்சுருக்குதல் மற்றும் சிறியதாக பளு தூக்குவது சாலச்சிறந்தவை.

மெதுவான, மிதமான நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, செல்ல நாய்க்குட்டியோடு ஒரு பயிற்சி நடை, வீட்டு முற்றத்தில் குடும்பத்தினரோடு ஒரு சிறிய கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து என பல பயிற்சிகளை செய்யலாம். சராசரி மனிதர்கள் தங்களின் வேலைப்பளுவை மனதில் வைத்து தினசரி உடற்பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஏரோபிக்ஸ், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் என மேலே கூறியவற்றை தினம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை – உங்கள் தினசரி வேலைப் பளுவை மனதில் கொண்டு செய்து, உடற்பயிற்சிக்கும் வேலைப்பளுவுக்கும் ஏற்றவாறு, சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம். உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது.