3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேச தாமதமாவதற்கு என்ன காரணம் ?

குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகு பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள். இருப்பினும் சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

குறைந்தபட்சம் உங்களின் உதட்டு உச்சரிப்பை குழந்தையை கவனிக்க வைத்து பேச வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதில் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில் சிகிச்சை பெறுவது ஆரம்பத்திலேயே குறைபாடுகளை சரிசெய்வதற்கு உதவும். நாக்கு அல்லது வாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். அன்கிலோக்ளோசியாபிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது.

மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது. மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம்.ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும்.