பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் என்ன ?

மனித உடலில் இருக்கும் சுரப்பிகள் சுரக்கும் தனித்துவமான திரவங்கள்தான் ஹார்மோன்கள். உடல், டஜன் கணக்கில் ஹார்மோன்களை சுரக்கிறது. உடல் வளர்ச்சி, பருவகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உணர்ச்சிகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரணம், உடலுக்கு தேவையான சத்துக்களை சேகரிப்பது, தூக்கத்தை உருவாக்குவது.. இப்படி ஹார்மோன்களால் உடலுக்குள் ஏற்படும் செயல்பாடுகள் ஏராளம். பொதுவான ஹார்மோன்களின் செயல்பாடுகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், இனப்பெருக்க விஷயத்தில் ஆண்-பெண் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுபடுகின்றன.

ஆண்களுக்குள் ஆண்மையை உருவாக்குவதும், பெண்களுக்குள் பெண்மையை உருவாக்குவதும் தனித்தனி ஹார்மோன்கள். பெண்களை எடுத்துக்கொண்டால் வருடத்தில் 365 நாட்களும் ஹார்மோன்கள் ஒரே மாதிரி சுரந்து கொண்டிருப்பதில்லை. சில நேரங்களில் ஹார்மோன்களின் சுரப்பில் சமச்சீரற்ற நிலை உருவாகிவிடும். அதற்கு தக்கபடி பெண்களின் உடல் செயல்பாட்டிலும் மாற்றங்கள் தோன்றும். டெஸ்டோஸ்டிரான் என்பது ஆண்களுக்கான ஹார்மோன். அது சிறிதளவு பெண்களின் உடலிலும் இருக்கிறது. ஆண், பெண் இருபாலரிடமும் பாலியல் ஆர்வத்தைத் தூண்டுவது, இந்த ஹார்மோன்தான்.

மூளையில் இருக்கும் ‘ஹைப்போதலமஸ்’, ஹார்மோன்களுக்கு மூல காரணமாக இருக்கிறது. அதை தவிர ஹைப்போதலமஸ்க்கு வேறுசில பணிகளும் உள்ளன. உடலில் உள்ள சீதோஷ்ண நிலையை சமன் செய்தல், வேலை நேரத்திக்கு தக்கபடி தூக்கத்தின் செயல்முறையை மாற்றுதல் போன்றவைகளையும் செய்கின்றன. கடுமையான மன அழுத்தம் ஏற்படும்போது ஹைப்போதலமசின் பணிகள் பாதிக்கும். அப்போது ஹார்மோன் உற்பத்திக்கான சிக்னல்களை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பெண்கள் அதிக மனஅழுத்தத்தில் இருக்கும்போது அவர்களது இனப்பெருக்க செயல்பாடுகள் முடங்கிப் போவதுண்டு. அப்போது ஹைப்போதலமஸ், அதற்குரிய ஹார்மோன்களை சுரக்காததே அதற்கான காரணம்.

பெண்கள் வயதுக்கு வந்த தொடக்க காலத்தில் ‘பி.எம்.எஸ்.’ எனப்படும் ‘பிரி மென்ஸ்டுரல் சிம்டம்’ தொந்தரவால் அவதிப்படுவதுண்டு. மாதவிலக்கு தொடங்குவதற்கு முந்தைய சில நாட்களில் இந்த பாதிப்பு உருவாகும். கோபம், எரிச்சல், பதற்றம், மன அழுத்தம், கவலை போன்றவை அதன் அறிகுறிகளாகும். மாதவிலக்கு சுழற்சி காலத்தின் இரண்டாம் பகுதி நாட்களில் மன அழுத்தம் கொள்வது, ‘மூட் அவுட்’ ஆவது போன்றவை தோன்றும். அப்போது புரோஜெஸ்ட்டிரான் அதிகமாக சுரக்கும். பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் ஹார்மோன் செய்யும் கலாட்டாதான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டு கோபதாப உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.