கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 106 காவலர்கள் பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று காவலர்களை குறிவைத்து அதிகமாக தாக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 106 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இந்தத் தொற்று பெரும்பாலும் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை அதிகம் தாக்கி வருகிறது.

மகாராஷ்டிராவில் மட்டும் சென்ற 24 மணி நேரத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 14,295 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிர்கொல்லி நோய்க்கு மேலும் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 11,545 காவலர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இப்பொழுது வரை 2,604 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.