சிறுமியின் உயிரைக் காப்பாற்ற 139 கி.மீ. தூரத்தை இரண்டரை மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

கேரளா: 139 கி.மீ. தூரத்தை விரைந்து கடந்த ஆம்புலன்ஸ்... கேரளாவில் இதயநோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற 139 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கட்டப்பனா என்ற பகுதியைச் சேர்ந்த ஆன் மரியா என்ற அந்த சிறுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில், உடனடியாக எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை.

139 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எர்ணாகுளத்துக்கு சாதாரணமாகச் சென்றாலே 4 மணி நேரத்துக்கு மேலாகும் என்று கூறப்படும் நிலையில், கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டினுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக சமூக வலைதளங்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள் வழியே விவரம் பொதுமக்களை சென்றடைந்தது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, போலீசாரின் பைலட் சேவையுடன் சுமார் இரண்டரை மணி நேரத்தில் எர்ணாகுளம் சென்றடைந்ததால் சிறுமியின் உயிர் காக்கப்பட்டது