மதுரையில் ஒரே நாளில் 157 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக மதுரையில் ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 157 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரும் நாட்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என என சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 52 பேருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதுபோல் 34 பேர் நேரடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 30 பேர் மறைமுகமாக கொரோனாவால் பாதிப்படைந்தனர். நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட இவர்கள் 157 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 849 ஆக உயர்ந்துள்ளது. இது போல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 389 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 452 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.