ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுவாக குறைந்து கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் குறைவானவர்கள் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம் புதிதாக 63 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். மேலும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 59 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறையின் பட்டியலின்படி மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது.

இதில் 10 ஆயிரத்து 838 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 625 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த அந்தியூரை சேர்ந்த 60 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.