வன்னி மாவட்டத்தில் 90 சதவீத தபால் வாக்குகள்; சமன் பந்துலசேன தகவல்

90 சதவீத தபால் வாக்குகள்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் இதுவரை 90 வீதமான தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 30 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பாரியளவிலான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “2020 நாடாளுமன்ற தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் நடந்தது.

வன்னி மாவட்டத்தில் தபால் வாக்களிப்புக்கு தகைமை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 709 ஆகக் காணப்படுகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குரிய வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தபால் மூலமான வாக்களிப்புக்கு 160 நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

வாக்களிப்பு நிலையங்களில் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கவில்லை. இதுகுறித்து முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை. சுகாதாரத்துறை அமைச்சினுடைய ஆலோசனைகளுக்கு அமைவாக தபால் மூலமான வாக்களிப்புகள் நடைபெறுவதுடன் இதுவரை 90 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தபால் மூலமாக வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் ஒழுங்கு செய்யப்படுகின்ற தபால் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.