ரகசிய ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப்

மியாமி: நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப்... ரகசிய ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுவித்தது

அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது, அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை அவர் எடுத்துச் சென்றதாகவும், அதில் சில ஆவணங்கள் தேச பாதுகாப்பு தொடர்பானவை என்றும் கூறப்பட்டன.

இதுதொடர்பாக தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய விசாரணையில் அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் டிரம்ப் ஒப்படைத்தார். மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் சில ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது, 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்கு மியாமி நகரிலுள்ள புளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அவருக்கு எதிராக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மியாமி நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்புடன் டிரம்ப் சரணடைந்தார். விசாரணையின் தொடக்கத்தில், ‘உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்று நீதிபதி கேட்டதற்கு, ‘இல்லை’ என்று டிரம்ப் பதிலளித்தார். டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 45 நிமிட விசாரணைக்கு பின்னர், அவரை கைது செய்த நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவித்தது.

அதன்படி, டிரம்ப் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் கேட்கவில்லை. அதேநேரம் சக ஊழியர் வால்ட் நவுடாவுடன் பேசக் கூடாது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் டிரம்ப் மியாமி நகரில் இருந்து புளோரிடா சென்றார்.