சுங்கச்சாவடி கட்டணங்கள் 40 சதம் வரை குறைக்க நடவடிக்கை

சென்னை: நெடுஞ்சாலைகளில் வசூல்செய்யப்படும் சுங்கசாவடி கட்டணங்களை 40% வரையிலும் குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

மாநிலங்களின் முக்கியமான சாலைகள் அனைத்தும் சுங்ககட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளுக்கு அருகே வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள சூழ்நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக இருக்கிறது.

இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை வருடந்தோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மக்கள், ஏழை மக்கள், வணிகர்கள், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைப்பதற்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் எம்பி வில்சனுக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்பி வில்சன் தன் டுவிட்டர் பதிவில் “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதில் வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு இப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்திருக்கிறார். அவற்றில் நெடுஞ்சாலைகளில் வசூல்செய்யப்படும் சுங்கசாவடி கட்டணம், பொது நிதி உதவி திட்டங்களில் சுங்கசாவடி கட்டணங்களை 40% வரையிலும் குறைப்பதற்கு முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.