கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் - பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவல் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று கூறினார்.

மேலும் அவர், ஒட்டுமொத்த என்.சி.ஆர் பகுதியிலும் தொற்று நோயை கட்டுப்படுத்த மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த கூட்டத்தில், அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.