4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை குறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகம், ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 2-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தொடங்கும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.