புயல் எதிரொலியால் முதல்வர் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, வரும் 25-ம் தேதி (நாளை) பெரம்பலூர், அரியலூருக்கு முதலமைச்சர் எடப்பாடி செல்வதாக இருந்தது. தற்போது அந்த சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

25-ம் தேதிக்கு பதில் 27-ம் தேதி அந்த மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 25-ம் தேதி முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், புயல், மழை எச்சரிக்கை உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் அடிப்படையில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டு 27-ம் தேதி முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.