பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பு இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரக்ஞானந்தாவின் பிரமிக்கவைக்கும் புத்திக்கூர்மை மிக்க ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். பிரக்ஞானந்தா, மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு. தேசம் அவரை நேசிக்கிறது என அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: செஸ் உலகக் கோப்பைத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சென்னையின் பெருமையான பிரக்ஞானந்தாவுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள நகமுரா மற்றும் 3-ம் இடத்தில் உள்ள கேருவனா ஆகியோரை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அவரது பயணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.இறுதி முடிவு என்னவாக இருந்தாலும், அவரது சாதனையுடன் 140 கோடி இந்தியர்களின் இதயங்களும் இணைந்து துடிக்கின்றன. நம் நாடே அதை நினைத்துப் பெருமை கொள்கிறது. பிரக்ஞானந்தா வென்றுள்ள இந்த வெள்ளிப் பதக்கமும், கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதித் பெற்றிருப்பதும் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

அதைத்தொடர்ந்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியிருப்பதாவது : செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் கடுமையாக போட்டியிட்ட நமது செஸ் மேதாவி பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துகள். இந்த சாதனை மாயாஜாலம் அல்ல. அவரது இடைவிடாத விடாமுயற்சியின் வெகுமதி. இதன்மூலம், மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டித் தொடரில் அவர் இடம் பிடித்ததற்காக இந்தியா பெருமை கொள்கிறது.

மேலும் பாமக தலைவர் அன்புமணி கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கால்சனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து, 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் முன்னணி வீரரிடம் போராடி அவர் பெற்ற தோல்வி, வெற்றிக்கு இணையானது. அவருக்கு எனது வாழ்த்துகள்.