ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? மருத்துவ நிபுணருடன் முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 46 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இந்த நிலையில் ஏழாம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து இந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுவதா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ நிபுணருடன் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்ற என்பது குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் அதே நேரத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.