அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்

சேலம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் உள்ளதால் வருகிற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், புறநகர், சங்ககிரி, ஆத்தூர், எடப்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ள நிலையில் அந்த மாவட்டங்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்.

நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஒன்றியங்களில் உள்ள வட்டார கல்வி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல், புதன்கிழமையான (இன்று) 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டன.

சேலம் மாநகர் கல்வி மாவட்டத்திற்கு அயோத்தியாப்பட்டணம் அரசு பள்ளியில் இருந்தும், புறநகர் கல்வி மாவட்டத்திற்கு மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும், எடப்பாடி பள்ளி மாவட்டத்திற்கு ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு ஓமலூர் காமாண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும், ஆத்தூர் மாவட்டத்துக்கு ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம். கல்வித்துறை அதிகாரிகள் வருகிற 10-ந் தேதிக்குள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.