மெக்சிகோவில் நடந்த கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல்

மெக்சிகோ நாட்டில் சில ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள், உள்நாட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆயுத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கால்பந்து போட்டியின்போது இரு தரப்பு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடியபோது ஒரு பிரிவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே திடிரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே சண்டையாக மாறியது.

சண்டை நடைபெற்று கொண்டிருக்கையில் போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு எதிர்தரப்பினரை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அந்த வீரரின் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். ஆனால், அந்த வீரர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தனது நண்பர்களுடன் தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞரையும் அவரது நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.