எம்.பி., பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கடும் கண்டனம்... ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது; பொருளாதாரம், சமூகம், அரசியல், சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளில் ராகுல் காந்தி உண்மையைப் பேசினார்.

இதனால் மத்திய அரசு அச்சமடைந்துள்ளது. ராகுல் காந்தியின் குரலை அடக்க மத்திய பாஜக அரசு புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு கருத்துக்களை துணிச்சலுடன் பேசியதற்கு ராகுல் காந்தி விலை கொடுத்துள்ளார்.

ஏப்ரல் 2019 இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி ஆஜரானார்.

அரசியல் சட்டத்தின் 103வது பிரிவின் கீழ் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் மட்டுமே ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய முடியும். இந்த விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை கூட கேட்கவில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.