இந்திய சீன எல்லையில் சர்ச்சை வாசகம் அடங்கிய பேனர் - உண்மை பின்னணி என்ன ?

இந்திய சீன எல்லை பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் லடாக்கின் பாங்கோங் ஏரியை ஒட்டிய பகுதியில் Fight To Win எனும் வாசகம் அடங்கிய பேனர் புகைப்படம் 'சீனா நிறுவிய எச்சரிக்கை பேனர்' எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில்,வைரலாகி வருகிறது. லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், இருநாட்டு எல்லை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 'லடாக்கில் சீனா நிறுவிய பேனர், மோடிக்கு தெளிவான தகவல்' எனும் தலைப்பில் வைரலாகி வரும் படம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ததில், இந்த புகைப்படம் அக்டோபர் 5, 2012 அன்று எடுக்கப்பட்டது என்பதும், இந்த பேனரை இந்திய ராணுவம் லடாக் எல்லை பகுதியில் நிறுவி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, சமூக வலைதளைங்களில் வைரலாகும் தகவல்கள் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த பேனர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா நிறுவவில்லை என்பது தெளிவாகி விட்டது. இந்திய சீன எல்லையில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற போலி செய்திகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் போலி செய்திகளை பரப்பாதீர்கள்.