இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றனர். எனினும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றது.

இந்த நிலையில், இந்தியாவில் தற்போதய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 39174-ஆக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2033 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 058 ஆக உயர்ந்துள்ளது. 51 உயிரிழந்துள்ளதால் பலியோனோர் எண்ணிக்கை 1249 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தாராவி, நாக்பூர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.