கடலூர் மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 45 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா பரவலை முழுவதும் குறைக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பீகார் மாநிலத்தில் இருந்து என்.எல்.சி. வந்த 2 பேர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த டாக்டர், சிதம்பரத்தை சேர்ந்த மருந்தாளுனர், புவனகிரியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஆகியோருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேருக்கும் நோய் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 911 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 389 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 39 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இது வரை 23 ஆயிரத்து 428 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இருப்பினும் இது வரை 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்த 171 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 37 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 462 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.