விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 550 உயர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 225 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,522 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 354 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,411 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 29 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 550 உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள கிராமங்களில் நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையே உள்ளது. நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தன போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் முக கவசம் அணிவதை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் அதனை கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது. பணியில் உள்ள பெரும்பாலான போலீசார் முக கவசம் அணிவது இல்லை. மாவட்ட போலீஸ் நிர்வாகம் போலீசாருக்கு இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டியது அவசியமாகும்.